பீஜிங்:
கொரோனா பரவல் குறித்து சீனாவுக்கு அமெரிக்காவிலிருந்து ஆய்வுக்குழு அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று சீனாவிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். டிரம்பின் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் பெருமளவு பாதிப்பை அடைந்து வருகின்றன. அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பெருமளவு உயிர்ச் சேதத்தை சந்தித்து வருகின்றன. கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் 7.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய அமெரிக்காவிலிருந்து விஞ்ஞானிகள் குழுவை சீனாவுக்கு அனுப்ப அனுமதிக்குமாறு சீனாவிடம் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். இதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் சுவாங், ' வைரஸ் என்பது மனித குலத்திற்கு பொதுவானது. இது உலகின் எந்த மூலையில் எப்போதும் உருவாகலாம். சீனாவும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சீனா குற்றவாளி அல்ல. கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து, அதன் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான விஷயங்களை உலக நாடுகளிடம் பகிர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த எங்களுக்கும் கடமை உள்ளது. எங்கள் முயற்சியை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்